விபத்தில் ஆசிரியர் பலி - தேர்தல் பணி முடித்து வீடு திரும்புகையில் சோகம்

சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தேர்தல் பணி முடித்து வீடு திரும்பிய ஆசிரியர் உயிரிழந்தார்.;

Update: 2024-04-21 04:46 GMT

பைல் படம் 

சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் கே.என்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் ராமலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். செல்வராஜ் நேற்று முன்தினம் கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வீரகனூர் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து நள்ளிரவில் அவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

Advertisement

இவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாள தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாழப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News