திருக்கழுக்குன்றம் : அரசு பள்ளிக்கு ரூ.1.12 கோடியில் வகுப்பறை
Update: 2023-11-27 06:58 GMT
திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. பட்டிக்காடு, அச்சரவாக்கம், எடையூர் உள்ளிட்ட பகுதி மாணவ - மாணவியர் பயில்கின்றனர். பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், திறந்தவெளி பகுதியில் வகுப்பு நடத்தப்பட்டது. அதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அவதிப்பட்டனர். கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, பெற்றோர் வலியுறுத்தினர். கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், அவர்களின் கோரிக்கையை பரிசீலித்தது. அதன் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், 1.12 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டி அளித்துள்ளது. கீழ்தளம், மேல்தளம் என, தலா இரண்டு வகுப்பறைகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்படவுள்ளதாக, நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.