கந்தர்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போர்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். கந்தர்வகோட்டை நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகளும் வந்து செல்லும் சூழ்நிலையில், சாலையோரங்களில் தனியார் பிளக்ஸ் போர்டுகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. ஆடி மாதம் காற்றடிக்க தொடங்கியுள்ள சூழலில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது பிளக்ஸ்போர்டுகள் விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை அகற்ற காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கந்தர்வகோட்டை ஊராட்சி உள்ளடங்கிய பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.