பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி:
மல்லசமுத்திரம் வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மல்லசமுத்திரம் தனியார் மண்டபத்தில் நேற்று, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உயிர்ம வேளாண்மை குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடந்தது. மல்லசமுத்திரம் வட்டார அட்மா திட்ட தலைவர் பழனிவேல் அவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்துவைத்தார். இக்கண்காட்சியில் உயிர்ம வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள், பூச்சி விரட்டி தாவரங்கள், பசுந்தாள் உரங்கள், பசுந்தழை உரங்கள், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய நெல், சிறுதானியங்கள், காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யுவராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா கலந்துகொண்டு, இன்றைய சூழ்நிலையில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். வேளாண்மை துணை இயக்குநர்கள் கவிதா, கோவிந்தசாமி ஆகியோர்கள் உயிர்ம விவசாயத்தை ஊக்குவிக்க அரசால் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சந்திரசேகரன், கலைச்செல்வி ஆகியோர்கள் உயிர்ம வேளாண்மையில் மண்வளப்பாதுகாப்பு, பண்ணை அளவில் இடுபொருட்கள் தயாரித்தல் மற்றும் பண்ணை கழிவுகளை மட்கவைக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்து கூறினார்கள். மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி நடராஜன் அவர்கள் இயற்கை முறையில் களைக்கட்டுப்பாடு உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி விளக்கமளித்தனர். இயற்கை விவசாயிகள் நாமக்கல் உழவர் ஆனந்த, பாப்பம்பாளையம் நல்லசிவம், செண்பகமாதேவி யசோதா, செம்மாண்டபட்டி சின்னுசாமி ஆகியோர் இயற்கை விவசாயத்தில் தங்களது அனுபவத்தை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர். உயிர்ம வேளாண்மைக்கு சான்றளிப்பு நடைமுறைகள் குறித்து விதைச்சான்று அலுவலர் ஹேமலதா விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் சிரஞ்சீவி நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.