ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சைவ நெறி முப்பூஜை திருவிழா
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சைவ நெறி முப்பூஜை திருவிழா
திருச்செங்கோடு செங்குந்தர் சமூக வீரவேல் கோத்திரத்தின் சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முப்பூஜை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாள் மணியனூர் மணிபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து தீர்த்த குடங்கள் பால்குடங்கள் பூஜை கூடைகள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பம்பை தாரை தப்பட்டை வாத்தியங்களுடன் ஊர்வலமாக அங்காளம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் அங்காளம்மனுக்கு பால் தயிர் சந்தனம் குங்குமம் விபூதி அரிசி மாவு நெல்லி பொடி கங்கை தீர்த்தம் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தது. மாலை 3 மணியளவில் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான முப்பூஜை நடந்தது. அங்காளம்மன் கோவில் முன்புறம் 16 எலுமிச்சம்பழம் 5 தேங்காய் ஒரு பூசணிக்காய் வெட்டி பலியிடப்பட்டது. வெண்பொங்கலில் குங்குமம் மற்றும் பலியிடப்பட்ட பொருட்கள் கலந்து மாசாணம் சென்று சூறையிடப்பட்டது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக திருச்செங்கோடு மாங்குட்டை பாளையம் வீரவேல் திருமண மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகள் , தீர்த்த கலசங்கள் , குடும்ப கலசங்கள் அடுக்கி வைக்கப்பட்டு , வீட்டு தெய்வம் புடவைகாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு யாக வேள்விகள் நடந்தது . தொடர்ந்து தம்பதியர் பூஜை சுமங்கலி பூஜை கன்னியா வந்தன பூஜை நடைபெற்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் 8000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.