கொல்லிமலையில் கள ஆய்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கொல்லிமலை வட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-08-21 16:41 GMT
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், கொல்லிமலை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் இன்று காலை 9.00 மணி முதல் கொல்லிமலை வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் அரசின் சேவைகள், நலத்திட்டங்கள், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு தற்பொது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கொல்லிமலை வட்டத்தில் இன்று காலை 9.00 மணி முதல் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அனைத்து உட்கட்டமைப்புகள் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் எனவும், மலை கிராமங்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும், கொல்லிமலையை ஒரு சிறந்த பகுதியாகவும், சுற்றுலாத்தலமாகவும் உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் எனவும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, கொல்லிமலை வட்டம், ஆரியூர் கிழக்கு வளவு கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் விபரம், மருந்துப்பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தெம்பலம், அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, படுக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்தும், மேலும் விடுதி சமையல் அறையில் உணவு பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கொல்லிமலை வட்டம், ஆரியூர் நாடு ஊராட்சி, ஊர்கலிங்கம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பணிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆரியூர் கிழக்கு வளவு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, கற்றல் திறன், மதிய உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அனைத்தொடர்ந்து, கொல்லிமலை அரசு தாலுகா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், வழங்கப்படும் சிகிச்சைகள் விபரம், மருந்து பொருட்களின் இருப்பு, சிகிச்சை பெறும் கர்ப்பிணித்தாய்மார்களின் விபரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், 1 பயனாளிக்கு ரூ.12,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தக்ஷசு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News