மதுரை - மலேசியா விமான சேவை தொடக்கம்.

மதுரையிலிருந்து நாளை முதல் மலேசியாவுக்கு விமான சேவை தொடங்குகிறது.

Update: 2024-12-20 05:16 GMT
மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை வழி மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை நாளை 21ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சேவையை துவங்குகிறது. முதல்முறையாக மதுரையிலிருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை நாளை 21ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. மதுரையிலிருந்து இரவு 9:05 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கு செல்கிறது. மறு மார்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9:30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு மதுரை வந்தடைகிறது. டில்லி, கோல்கட்டாவில் இருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னை, மதுரைக்கு இணைப்பு விமானமாக இந்த பினாங்கு விமானத்தை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மதுரையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான டிக்கெட் வழங்கப்படுவதோடு பயணிகளின் உடைமைகளை நேரடியாக பினாங்கிற்கு அனுப்பும் வசதியும் கிடைக்கும். இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சேவை வழிகாட்டுதலின்படி, மதுரையில் இருந்து பினாங்குக்கு நேரடி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஒரே PNR உடன் இரண்டு விமானங்களில் பயணம் செய்வார்கள். பயணிகள் உடமைகள் 30 கிலோ செக்-இன் சாமான்களையும், 7 கிலோ கேபின் லக்கேஜையும் கையில் எடுத்துச் செல்லலாம் தென் மாவட்ட மக்கள் குறிப்பாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை . காரைக்குடி செட்டிநாட்டு பகுதியைச் சேர்ந்த பலர் பினாங்கில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை - பினாங்கு விமான சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News