ஆரியங்காவு- நெல்லைக்கு பேருந்து சேவை தொடக்கம்
நெல்லைக்கு பேருந்து சேவை தொடக்கம்
ஆரியங்காவிலிருந்து இருந்து நெல்லைக்கும், அம்பநாடு எஸ்டேட்டில் இருந்து தென்காசிக்கும் புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டுமென கேரள மாநில திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில், முதல்கட்டமாக ஆரியங்காவு- திருநநெல்வேலிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கவிழா ஆரியங்காவில் நடைபெற்றது. கேரள மாநில திமுக அமைப்பாளா் முருகேசன் தலைமை வகித்தாா். புனலூா் எம்எல்ஏ சுபால், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், முன்னாள் மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன், கொல்லம் மாவட்டச் செயலா் ரெசிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சா் கணேஷ்குமாா், தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி, கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கிவைத்தனா். அமைச்சா் சிவசங்கா் பேசுகையில், தமிழக மக்களும், கேரளா மக்களும் எப்போதுமே சகோதரா்களாக இணைந்து செயல்படுபவா்கள். திருநெல்வேலி - ஆரியங்காவு இடையே தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து சேவையானது கேரள போக்குவரத்து துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுற்றுலாத் தலமான பாலருவி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கேரள போக்குவரத்து கழக ஊழியா்கள் தமிழகத்திற்கு பேருந்தை இயக்கி வரும் போது அவா்கள் ஓய்வு எடுக்க தேவையான இடவசதி செய்துதரப்படும். முதல்வரின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பேருந்து சேவைபோல் மேலும் பல்வேறு பேருந்து சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.