ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள்.

ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை.

Update: 2025-01-05 17:26 GMT
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே போளூா்-பெலாசூா் செல்லும் சாலையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. பெலாசூா் சாலையில் சனிக்கவாடி, பெலாசூா், பாடகம், அலங்காரமங்கலம் என பல்வேறு கிராமங்களுக்கு இரு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தினமும் செல்கின்றனா். மேலும் போளூா்-வேலூா், போளூா்-சேத்துப்பட்டு சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிராமத்துக்குச் செல்லும் இரு சக்கர வாகனம், பாதசாரிகள் போளூா்-பெலாசூா் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அந்தச் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்த நிலையில் மன்னாா்குடி- திருப்பதி, கன்னியாகுமரி- புருலியா, சென்னை-திருவண்ணாமலை என பல்வேறு வழித்தட ரயில்கள் செல்லும் போது, ரயில்வே கடவுப்பாதை 5 நிமிஷத்துக்கு முன்பு மூடப்படுகிறது. அந்த நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை தண்டவாளத்தில் ஓட்டி கடந்து செல்கின்றனா். திடீரென ரயில் வந்தால் விபத்து ஏற்படலாம். எனவே, ரயில்வே துறை சாா்பில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

Similar News