மழைநீரில் நெல்மணிகள் நனைந்ததால் அதன் நிறம் மாறியிருப்பதோடு
கடும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை;
நாகை மாவட்டத்தில், நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால், குறுவை சாகுபடி பொய்த்து போனது. மாவட்டத்தில், 1.60 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, சம்பா சாகுபடி கடுமையான பாதிப்படைந்துள்ளது. கதிர் முற்றும் தருவாயில் பெய்த மழை காரணமாக பெரும் மகசூல் இழப்பை சந்தித்த விவசாயிகள், எப்படியாவது பயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அறுவடை நேரத்தில் பெய்த மழை காரணமாக நெற்பயிர்கள் வயலிலே சாய்ந்து, மழைநீரில் மூழ்கி சேதமானது. வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைத்தும் கூட அறுவடை இயந்திரம் கொண்டு அறுக்க முடியாத நிலை ஏற்பட்டது. போதிய வெயில் இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி தொழிலாளர்களை வைத்து, கையால் அறுவடை செய்து, நெல்மணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி, நீர்முளை, நத்தப்பள்ளம்,கொத்தங்குடி, சித்தாய்மூர், கச்சநகரம், கொளப்பாடு, பையூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் மணிகளின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், அவற்றை சாலையில் கொட்டி உலர வைத்து வருகின்றனர். மழை நீரில் நெல்மணிகள் நனைந்ததால் அதன் நிறம் மாறி இருப்பதோடு, பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே, வாங்கிய கடனை அடைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.