
கன்னியாகுமரி அருகே ஒற்றையால் விளையை சேர்ந்தவர் செந்தில் முருகன் (44). இவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகணேஷ் குமார் (24) அனீத் குமார் (25) ஆண்டனி தாமஸ் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சென்று செலவுக்கு பணம் வேண்டும் என்றும், பணம் தரா விட்டால் செல்போனில் உள்ள வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவதாக கூறியுள்ளனர். இதை அடுத்து செந்தில் முருகன் பணம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் நாங்கள் வரும்போது பணம் தர வேண்டும் இல்லை என்றால் வீடியோ வெளியிடுவோம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக செந்தில் முருகன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பந்தப்பட்ட நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த 17 வயது சிறுவனிடம் வியாபாரி செந்தில் முருகன் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் 17 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் வியாபாரி செந்தில் முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.