நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் முப்பெரும் விழாவில் நாமக்கல் எம்எல்ஏ பங்கேற்பு! -போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்!
வள்ளுவமும், வேதாத்திரியும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள் 6 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை நாமக்கல் எம்எல்ஏ வழங்கினார். மேலும் சிலம்பத்தில் கின்னஸ் சாதனை புரிந்த மாணவர் ஆர்.டி.தேவசிவபாலனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்;
நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், வேதாத்திரி மகரிஷி ஐ.நா.சபையில் உரையாற்றிய 50–ஆம் ஆண்டு விழா, பொரு அருள்நெறி சமய 40–ஆம் ஆண்டு விழா, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை 48–ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா அறிவுத்திருக்கோயில் அரங்கத்தில் நடைபெற்றது. செயலாளர் வி.கே.சுப்பிரமணியன் வரவேற்றார். நிர்வாக அறங்காவலரும், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலருமான மு.ஆ.உதயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட நீதிபதி கருணாநிதி, மருத்துவர் ஏ.ஜெயந்தினி, முதுநிலை பேராசிரியர் உழவன் மா.தங்கவேலு, மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு ஆகியோர் பங்கேற்று பேசினர். முன்னதாக, அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டது. அதன்பிறகு, வள்ளுவமும், வேதாத்திரியும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள் 6 பேருக்கு நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலும் சிலம்பத்தில் கின்னஸ் சாதனை புரிந்த மாணவர் ஆர்.டி.தேவசிவபாலன் கெளரவிக்கப்பட்டார். இந்த விழாவில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பேசுகையில்..... *குமரியில் வள்ளுவர் சிலை நிறுவியதன் 25 ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறோம். வள்ளுவருக்கு இணையாக போற்றப்படுபவர் வேதாத்திரி மகிரிஷி. மாணவர்களும், பொதுமக்களும் மனஅமைதிக்கு தியானம், மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வாழ்வில் அமைதி பெற வேண்டும் என்றார். மனவளக்கலை மன்ற தலைவரும், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலருமான மு.ஆ.உதயக்குமார் பேசுகையில்.... சுமார் 600 உறுப்பினர்களை கொண்ட இந்த நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் வருங்காலத்தில் 1,000 உறுப்பினர்களாக அதிகரிக்கும். மாநில அளவிலும், தேசிய அளவிலும் யோகாவில் சாதனை படைத்து நாமக்கல் மனவளக்கலை மன்றம் மத்திய அரசின் பாராட்டு பெற்றுள்ளது. தற்போதைய காலச்சூழலில் மனஅமைதிக்கு தியானம் அவசியம். அதனை வழங்குவது நாமக்கல் அறிவுத்திருக்கோயில் என்றார். இந்த விழாவில், அறக்கட்டளை பொருளாளர் சி.நாகராஜன், திட்ட ஆலோசகர் எம்.கே.குரு, ஆலோசகர்கள் ஆர்.வெங்கடாசலம்,எஸ்.எம்.ராமு, கிரீன் பார்க் குருவாயூரப்பன், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை மோகன், காந்தியவாதி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.