பரமத்திவேலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
பரமத்திவேலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.;
பரமத்திவேலூர், பிப்.17: பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம், சந்தப் பேட்டை புதூர் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). இவரது கணவர் கோபி இறந்துவிட்டார். இவர்களுக்கு ஹேமலதா (24) என்ற மகளும், கதிர்வேல் (19) என்ற மகனும் உள்ளனர். படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ராஜேஸ்வரி உறவினர் வீட்டு ஈமச்சடங்கிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குவந் துள்ளார். கதவு உள்பக்கம் சாத்தப்பட்டு இருந்ததால் கதவை தட்டி மகளை கதவை திறக்குமாறு அழைத்துள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் ஹேமலதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் செல் போன் மூலம் ஜன்னல் வழியாக லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் விட்டத்தில் உள்ள கொக்கியில் துப்பட்டாவால் ஹேமலதா தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டு இருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத் தில் இருந்தவர்களை அழைத்து அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே ஹேமலதா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேம்லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலைக் கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.