கோவை: ரயில் மோதி முதியவர் பலி !
கோவை, ஒண்டிப்புதூர் சுங்கம் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே கேட் அருகே நடைப் பயிற்சிக்குச் சென்ற 74 வயது முதியவர் ரயில் மோதி உயிரிழந்தார்.;

கோவை, ஒண்டிப்புதூர் சுங்கம் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே கேட் அருகே நடைப் பயிற்சிக்குச் சென்ற 74 வயது முதியவர் ரயில் மோதி உயிரிழந்தார். கோவை, சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, நேதாஜி புரத்தைச் சேர்ந்த சடையப்பன் என்பவரின் மகன் ஓதியப்பன் (74). இவர் வழக்கம் போல் நேற்று மாலை நடைப் பயிற்சிக்குச் சென்று உள்ளார். பின்னர், ஒண்டிப்புதூர் சுங்கம் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த ரயில் அவர் மீது மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஓதியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஓதியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சமீப காலமாக ரயில் விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே தண்டவாளங்களில் பொதுமக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், ரயில்வே கேட் அருகே கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரயில்வே போலீசார் எச்சரித்து உள்ளனர்.