கோவை: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு மற்றும் தர்ணா !
முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;

கோவை, மேட்டுப்பாளையம் நகராட்சி மன்றக் கூட்டம், நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நகர் மன்றத் தலைவர் மெகரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் அமுதா, துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அதிமுக நகர மன்றக் குழுத் தலைவர் சலீம், விஜயலட்சுமி, கலைச்செல்வி உள்ளிட்ட 9 அதிமுக கவுன்சிலர்கள், கடந்த மூன்று மாதங்களாக கூட்டங்களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாதது, குடிநீர் பிரச்சனை, பழுதடைந்த பேட்டரி வாகனங்கள், குடிநீர் மற்றும் சொத்து வரி உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்கள், கூட்ட அரங்கின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.