
கன்னியாகுமரி அடுத்த லீபுரத்தில் பாட்டுக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோர பகுதிகளில் செடி கொடிகள் படர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதி வழியாக சிலர் நடந்து சென்ற போது, பாதி எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்ட் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வாலிபர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார்? அவரை யாராவது கொலை செய்து எரித்தார்களா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் எப்படி இறந்தார் என தெரியவரும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.