ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மருத்துவமனை சுகாதாரத் துறை மருத்துவர்களுடனான மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடங்கிய சுகாதாரத் துறை மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத்தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. மேலும், மருத்துவம் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளும், சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் பணிபுரியவேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் (VHN) நோயாளிகளை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து அவர்களின் நலனை பேண வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதம் (Sex Ratio) மிகவும் குறைவாக இருப்பதாலும், அதிக பிள்ளைப்பேறு பெறுவதில் (HOB) அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், இளம் வயது கர்ப்பம், இளம் வயது திருமணம் (Teenage Pregnancy) இவையாவும் அதிகமாக இருப்பதை குறித்து அனைத்து மருத்துவ ஊழியர்கள் இணைந்து பணியாற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட பொதுமக்களிடையே குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை தெரியப்படுத்தும் வகையில், தற்காலிக கருத்தடை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். தொழுநோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, பாலின விகிதம் (Sex Ratio), High Order Birth, மகப்பேறு இறப்பு உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து வருகின்ற 29.03.2025 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் துறைத் தலைவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகள் சிறந்த முறையில் செயல்பட்டு பொதுமக்களிடையே நற்பெயர் பெறவும், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்படவும், மருத்துவமனை வளாகத்தினை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் மரு.எம்.சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் (பொ), மரு.S.சௌண்டம்மாள், அனைத்து அரசு மருத்துவ அலுவலர்கள், துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (குடும்பநலம் / காசநோய் / தொழுநோய்), மாவட்ட சுகாதார அலுவலர், அரசுத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் மேலாளர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலர், மாவட்ட மனநலத் திட்ட மனநல அலுவலர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க அலுவலர் (DBCS) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.