தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடு மடுவாகவும் உள்ளது: ஆர்.பி.உதயகுமார்
அரசின் அறிவிப்புகள் மலையாகவும், செயல்பாடுகள் மடுவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.;

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடி வருகிறோம். தமிழக மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள ஏரி, குளங்கள், கால்வாய் போன்ற நீர்நிலைகளை குடிமராமத்து திட்டத்தின்கீழ் விவசாயிகளை பயன்படுத்தி குடிமராமத்து திட்டம் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் அன்றைய முதல்வர் பழனிசாமி. ஆறுகளில் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாகி வருகிறது. அத்திக்கடவு- அவிநாசி திட்டம், காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று பார்க்காமல், மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என கருதி திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021-ல் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12,000 கோடி கடனை அப்போதைய அதிமுக அரசு தள்ளுபடி செய்தது. தமிழக அரசு பெற்று வரும் விருதுகளுக்கு எல்லாம் இதை கொடுத்த விவசாயி அப்போதைய முதல்வர் பழனிசாமிதான். தண்ணீர் சேமிக்கும் முறை சிக்கனத்தின் அவசியத்தை தெரிந்துதான் நீரின் மேலாண்மையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் புரட்சி செய்யப்பட்டது. ரூ.10 ஆயிரம் கோடியில் ஏரி, குளங்கள் புனரமைப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, இப்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி பார்க்கும்போது, அறிவிப்பு மலையாகவும், செயல்பாடு மடுவாகவும் இருக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு அணை விவகாரம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு மூன்று மாநில முதல்வர்களை அழைத்து பேசிய தமிழக அரசு, மேற்குறிப்பிட்ட நீர் விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்திருக்கலாம். தினமும் 10 ஆயிரம் லாரிகள் மூலம் ஓசூர் வழியாக தமிழகத்தில் இயற்கை வளங்கள் கடத்தி செல்லப்படுகிறது. அவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.