நாளை முதல் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் தென்னிந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கேஸ் லோடு ஏற்றவோ/ ஏற்கனவே ஏற்றி உள்ள கேஸ் லோடுகளை இறக்கிடவோ மாட்டோம்.;

Update: 2025-03-26 07:53 GMT
நாளை முதல் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
  • whatsapp icon
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் டெண்டரில் தங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்காதபடி டெண்டர் விதிமுறைகளை தளர்த்திட வலியுறுத்தி, நாளை மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல், தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரிகள் இயக்கப்படாது என, தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் அறிவித்தார்.நாமக்கல்லில் உள்ள சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில், (26.03.2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு டெண்டர் முறையில் எல்பிஜி லாரிகளை இயக்கி வரும் லாரி உரிமையாளர்களுக்கு புதிய ஒப்பந்தத்தை அந்த எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் 1-ம் அறிவித்துள்ளது. அதில் 21 டன் எடை கொண்ட 3 அச்சு (AXIL) லாரிகளுக்கு முன்னுரிமை, கிளீனர் இல்லையென்றால் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள், எல்பிஜி டேங்கர் உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், விதிமுறைகளை தளர்த்த வேண்டி எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்த நிலையில் எதையும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில், மார்ச் 27 அதிகாலை 6 மணி முதல் வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் கூறிய அவர்,
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்க உறுப்பினர்களுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 514 எல்பிஜி புல்லட் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.இந்த நிலையில் புதிய ஒப்பந்தங்களுக்கு மார்ச் ஒன்று முதல் ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.கடந்த ஒப்பந்த காலத்தில் 5,514 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவை அனைத்தும் இயக்கப்பட்டன. ஆனால் தற்போதைய எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பில் 3,478 லாரிகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், 2036 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுவதோடு லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தொழில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.தற்போது அறிவித்துள்ள ஒப்பந்தத்தில் 21 டன் எடையுள்ள எரிவாயு ஏற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.ஆனால் சங்கத்தில் உள்ள 5700 லாரிகளில் சுமார் 80 சதவீத லாரிகள் 18 டன் கேஸ் ஏற்றிச் செல்லும் 2 அச்சு லாரிகளாக உள்ளன. இதனால் புதிதாக யாரேனும் 3 அச்சு லாரிகளை வாங்கி ஒப்பந்தம் கோரும்போது, அவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே லாரிகளை வைத்து தொழில் செய்வதற்கு ஒப்பந்தம் கிடைக்காமல் போய்விடலாம் என்ற கவலை எழுந்துள்ளது.எனவே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்தத்தில் விதிமுறைகளை திருத்தம் செய்து 2 அச்சு லாரிகளை, குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடைபிடிக்க வேண்டும் என்றும் தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தோம்.இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த ஒப்பந்தத்திற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், புதிய ஒப்பந்தத்தில் லாரி உரிமையாளர்களுக்கு எதிராக நிறைய பாதகங்கள் உள்ளன.அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமென பொதுத்துறை எண்ணெய் துறை நிர்வாகிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதுகுறித்து மார்ச் 19-ம் தேதிக்குள் பேசி முடிவெடுக்கப்படும் என எண்ணெய் நிறுவன அலுவலர்கள் உத்தரவாதம் அளித்தனர். அதற்குப் பின்னரும் 24-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.ஆனால் இதுவரை கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே வேறு வழியின்றி மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் தென்னிந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து காஸ் லோடு ஏற்றவோ/ ஏற்கனவே ஏற்றி உள்ள கேஸ் லோடுகளை இறக்கிடவோ மாட்டோம். கேஸ் டேங்கர் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்க உள்ளோம்.
ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பாதுகாப்புடன் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டமாக தொடரும் என்றும் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தால் தென்னிந்தியா முழுவதும் வீடுகளுக்கு சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என்றும் நாமக்கலில் தென் மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது,தென் மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அம்மையப்பன், உப தலைவர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் பிரபாகரன், இணை செயலாளர் கோபி, துணை செயலாளர் கௌசிகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News