கள் ஒரு கலப்படப் பொருள் என சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தவறான கருத்தை திரும்பப் பெற வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
கள் ஒரு கலப்பட பொருள் என தமிழ்நாடு சட்டசபையில் கருத்து தெரிவித்த அமைச்சர் பொன்முடி அவர்கள் அவரது தவறான கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - இல்லையென்றால் அவரது தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரை தோற்கடிப்போம் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு;

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (25.03.2025) கேள்வி நேரத்தின்போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி. மனோகரன் அவர்கள் தமிழ்நாட்டில் கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் கேரளம், கர்நாடகம், தெலுங்கானா மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது, அது ஒரு மருத்துவ தன்மை கொண்டது என, இவ்வளவு ஆண்டு காலமாக நாம் தெரிவித்து வருகின்ற கருத்துக்களை சட்டசபையில் கேள்வி கேட்டு கள் தடை நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்து பேசிய மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் கா. பொன்முடி அவர்கள் கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சாப்பிட அனுமதி இருந்தது, மரத்திலிருந்து இறக்கும்போது கலக்க வேண்டியதை கலக்கி கள்ளை போதை பொருளாக மாற்றி விடுவார்கள், அதெல்லாம் இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து, பதநீர் இறக்குவதற்கு கூட அனுமதி கொடுப்பதற்கு நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கருத்தையும், பனைமரம் இருக்க வேண்டிய பகுதியில் மட்டும் இந்த கோரிக்கை வந்து கொண்டு இருக்கிறதாகவும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். பொதுவாக அவரது கருத்தில் கள் ஒரு கலப்பட பொருள் என்கிற கருத்தை தெளிவுபடுத்தி தெரிவித்திருக்கிறார், அதே சட்டசபையில் கேள்வி கேட்ட சட்டமன்ற உறுப்பினர் ரூபி. மனோகரன் அவர்கள் மிகத் தெளிவாக கள் மீதான அறிவியல் பூர்வமான கருத்தை தெரிவித்துள்ளபோது, எவ்வித அறிவியல் பூர்வமான கருத்துக்களும் இல்லாமல், ஆய்வு இல்லாமல், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய வழக்குகள் அதிகமாக இருக்கிற, கள்ளச்சாராய இறப்புகள் அதிகமாக இருக்கிற மாவட்டத்திலிருந்து வந்திருக்கக்கூடிய அமைச்சர் கள் மீது குற்றம் குறை சொல்லி பேசி இருப்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகள் மத்தியிலும், கள் போராளிகள் மத்தியிலும், பனையேறிகள் மத்தியிலும் மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய அறிவியல் பூர்வமற்ற, பகுத்தறிவற்ற, உண்மைக்கு முரணான கள் மீதான கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும், அவர் திரும்ப பெறவில்லை என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கள் போராளிகள் மற்றும் அனைத்து விவசாயிகளையும் திரட்டி வருகிற சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடக்கூடிய தொகுதியில் அனைத்து விவசாயிகளும் சென்று அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என பரப்புரை செய்து, அவரை தோற்கடிப்போம் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.