தேர்தல் குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்: தவெக பொதுக்குழுவில் தீர்மானம்

தேர்தல் குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்படும் என தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2025-03-28 17:48 GMT
தேர்தல் குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்: தவெக பொதுக்குழுவில் தீர்மானம்
  • whatsapp icon
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். மொத்தம் 2,150 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண மீனவர்கள் எடுக்கும் போராட்டத்திற்கு முழு ஆதரவு. கடலூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. மாநில சுயாட்சிக்கு எதிராக மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம். தமிழகத்துக்கு எப்போதும் இரு மொழிக் கொள்கைதான். அதேபோல் மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி போராடி வரும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவு. முக்கியமாக தமிழகத்தில் சமூக நீதி நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும். அதை தவெக முழுமையாக நம்புகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் அமைய உள்ள பன்னாட்டு அரங்குக்கு பெரியார் பெயரை சூட்ட வேண்டும். தவெகவின் கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோரது வழிகளில் சமரசமின்றி பயணிப்போம். குறிப்பாக தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளையும் எடுக்க தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும். கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் என மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்துடன் தவெகவின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News