அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களில் பயின்ற மாணவர்கள் அரசு போட்டித் தேர்வில் தேர்ச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களில் பயின்று 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி. மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தகவல்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களில் பயின்று அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 40 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களை அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர், பட்டணம் ஆகிய 5 இடங்களில் அறிவு சார் மையம் மற்றும் நூலகம் செயல்பட்டு வருகின்றன. இதில் நாமக்கல் முல்லை நகரிலுள்ள மாநகராட்சி அறிவு சார் மையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவியர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் ஏராளமான புத்தகங்கள், அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகள், இண்டர்நெட் வசதியுடன் கூடிய கணினிகள் மற்றும் டிஜிட்டல் நூலகமும் செயல்பட்டு வருகிறது. அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நுண்ணறிவு திறன் வழியாக (AIM TN-Mission-80) யூடிப் சேனல் வழியாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), ஒன்றிய அரசின் பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL) வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி – 2 மற்றும் 2அ தேர்விற்கான மாதிரி தேர்வுகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் நடத்தப்படும் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் இம்மையத்தில் வந்து பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும், நாமக்கல் முல்லை நகரிலுள்ள மாநகராட்சி அறிவு சார் மையம் மற்றும் நூலகத்திற்கு பல இடங்களில் இருந்து வருகை தந்த பயின்ற 16 மாணவ, மாணவியர் TNPSC GROUP -4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். SSC-Staff Selection Commission GD-2024 தேர்வில் 1 மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், திருச்செங்கோடு அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில் 17 மாணவ மாணவியர்களும், குமாரபாளையம் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில் 5 மாணவ, மாணவியர்களும், பட்டணம் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில் 4 மாணவ, மாணவியர்களும், மோகனூர் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில் 2 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி 44 மாணவ மாணவியர்கள் அரசு பணிக்கு சென்று நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்கள் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மேலும் அனைத்து போட்டித் தேர்வாளர்களும் அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) மு.கிருஷ்ணவேணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டர்.