பண்ணாரி கோவில் அருகே நடமாடிய ஒற்றை யானை

பண்ணாரி கோவில் அருகே நடமாடிய ஒற்றை யானை;

Update: 2025-04-22 10:28 GMT
பண்ணாரி கோவில் அருகே நடமாடிய ஒற்றை யானை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோயில் அருகே இரவில் நடமாடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சத்தி அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். பண்ணாரி கோவில் அமைந்துள்ள பகுதி சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் அடிக்கடி ரோட்டோரமாக இரவில் வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை திடீரென கோவில் முன் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் அங்கும் இங்கும் நடமாடியது. இதைத் கண்ட கடைக்காரர்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் நடமாடிய யானை பின் காட்டுக்குள் சென்றது. யானை காட்டுக்குள் சென்றதை அறிந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

Similar News