கணவனை கொலை செய்த மனைவி சிறையில்அடைப்பு
தாளவாடி அருகே கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி சிறையில் அடைப்பு 2 மகன்கள் பரிதவிப்பு;
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (50) விவசாயி, இவரது மனைவி ரேவதி (34). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகனும் என 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மல்லன்குழி அரசு மாதிரி பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.இளைய மகன் சூசைபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் 5- ம் படித்து வருகிறார்.கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவன் - மனைவிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.தங்கவேல் கோபி அடுத்த சூரியம்பாளையத்தில் இருந்து வந்ததாகவும், தங்கவேல் ஆழ்குழாய் கிணறு அமைக்க நீர்மட்டம் பார்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார். மனைவி ரேவதி தாளவாடியில் தனது விவசாய தோட்டத்தில் மகன்களுடன் விவசாயம் பார்த்து வந்துள்ளார்.கடந்த சில வருடங்கள் முன்பு ரேவதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நேற்று கோபியிலிருந்து தாளவாடிக்கு வந்த தங்கவேல் தனது மனைவி வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது இரு மகன்களையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த ரேவதி கீழே கிடந்த கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டு உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தங்கவேல் உயிரிழந்தார். இதுபற்றி தாளவாடி காவல்துறைக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற தாளவாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் ரேவதியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்றதை அவர் ஒப்பு கொண்டார்.பின்னர் தங்கவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்ந்து ரேவதியிடம் விசாரணை நடத்திய தாளவாடி போலீசார் இன்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ரேவதியின் இரண்டு மகன்கள் யாருடைய ஆதரவும் இன்றி அனாதையாக பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.