அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற காலக்கெடு நீட்டிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற கால அவகாசம் மே 4-ந் தேதிக்கு பிறகு அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை;

Update: 2025-04-24 10:53 GMT
ஈரோடு மாவட்டத்தில் அந்தந்த அரசு துறை வாயிலாக, அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி, கம்பங்களை தாமாகவே முன் வந்து அகற்றுவதற்கு, வரும் மே 4-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள நடப்பட்டுள்ள அரசியல் கட்சி, சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரங்களுக்குள் அகற்றவேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசியல், மதம் சார்ந்த அமைப்புகள், ஜாதி அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகள் என 3,500க்கும் மேற்பட்ட கம்பங்கள் உள்ளன. குறிப்பாக, ஈரோடு மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் 396, மதம் சார்ந்த கம்பங்கள் 12, ஜாதி சார்ந்து வைக்கப்பட்டவை 2, பிற இனங்கள் 7, பில்லருடன் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களின் எண்ணிக்கை 40. மொத்தம் 457 கொடி கம்பங்கள் உள்ளன. இதனால், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்., 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. மின் கம்பிகளுக்கு அருகே உள்ள கம்பங்களை அகற்ற, மின் இணைப்பு துண்டித்தும், இக்கட்டான இடங்களில் உள்ள கம்பங்களை அகற்ற தேவையான உதவிகள் செய்துதர அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனர். இருப்பினும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஜாதி அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகள் கொடிக்கம்பங்களை அகற்றாமல் மெத்தனமாகவே உள்ளனர். இந்நிலையில், அந்தந்த அரசு துறை வாயிலாக, அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி, கம்பங்களை தாமாகவே முன் வந்து அகற்றுவதற்கு, வரும் மே 4-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. வரும் மே 4ம் தேதிக்கு பின்னரும் கொடி பறந்தால், துறை சார்ந்த அதிகாரிகளே களமிறங்கி கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News