காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக ஈரோட்டில் விடிய விடிய சோதனை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புவிடிய விடிய தீவிர வாகன சோதனை;

Update: 2025-04-24 11:24 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்காம் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவி சுற்றுலா பயணிகளின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 27 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து உளவுத்துறை உஷார் படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நேற்று இரவு முதல் தமிழக முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு முதல் காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையை தீவிர படுத்தினர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனை சாவடி, லட்சுமி நகர் சோதனை சாவடி, தாளவாடி அடுத்த காரை பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர பகுதியில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் வ உ சி காய்கறி மார்க்கெட் பகுதியிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு ரயில்வே நுழைவு பகுதியில் ரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்தனர். மோப்பநாய் பவானி வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு நடைமேடையாக சென்றது. ரயில் நிலையத்தில் தேவை இன்றி சுற்றி திரிந்த நபர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரயில் நிலைய பார்சல் பகுதி, டிக்கெட் கவுண்டர் பகுதி ரயில்வே பணிமனை பகுதி என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இதைப்போல் விடுதிகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர். கோபியில் உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், மசூதிகள், தேவாலயங்களில் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் பஸ் நிலையம், சந்தை, பொதுமக்கள் கூடும் கடைவீதிகள் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு கோபி போலீஸ் நிலையத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா திடீரென ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு பணி குறித்து பார்வையிட்டார். ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் உள்ள கைதிகள் அறையில் பைல்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததை அகற்ற உத்தரவிட்டார். கைதிகள் அறையில் வேறு எந்த பொருட்களையும் சேர்த்து வைக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதே போல் அந்தியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், பவானி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Similar News