ரேஷன் அரிசி கடத்தல் ரைஸ் மில் உரிமையாளர் தலைமறைவு
பெருந்துறை அருகே தனியார் ரைஸ்மில்லில் 40 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்திய 5 பேர் கைது தலைமறைவான உரிமையாளரை பிடிக்க தீவிரம்;
ஈரோடு மாவட்டம்பெருந்துறை அருகே வாவிகடை பகுதியில் தனியார் ரைஸ்மில் செயல்பட்டு வருகிறது.இங்கிருந்து வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பெயரில் டிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது இரண்டு லாரிகளில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ஏற்றிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காவிரி நகரச் சேர்ந்த பாபு (37), ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஜானகிராமன், பிரகாஷ், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், கார்த்திக் என தெரிய வந்தது. ரைஸ் மில்லின் உரிமையாளர் சம்பத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து 5 பேரையும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், 40 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.