கட்சிக் கொடி கட்ட சாலையை சேதப்படுத்திய நபர்கள்
மயிலாடுதுறை நகராட்சியில் அமைக்கப்பட்ட இரண்டே நாட்களில், அமைச்சர் மெய்யநாதனின் நேர்முக உதவியாளர் இல்ல திருமண விழாவுக்கு திமுக கொடி கம்பம் நடுவதற்காக சேதப்படுத்தப்பட்ட பேவர் பிளாக் கற்கள்:- நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு வைரல்:-;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில், சாலையின் இருபுறங்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மகாதானத்தெரு பகுதியில் பேவர் பிளாக் கற்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டன. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் நேர்முக உதவியாளர் உமாசங்கர் என்பவரது இல்ல திருமண வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் அமைந்துள்ள சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டன. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களை நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் உடைத்து அப்புறப்படுத்தியுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட இரண்டே நாட்களில் பேவர் பிளாக் கட்டில் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து "நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், திருமண மண்டபம் அமைந்துள்ள 17-வது வார்டு உறுப்பினர் இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.