கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு
மேன் ஹோலில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு;
ஈரோடு வீரபத்திர வீதியில் பாதாள சாக்கடை மேன் ஹோலில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வீரபத்திர வீதி அருகே வ.உ.சி பூங்கா, விளையாட்டு மைதானம், காய்கறி மார்க்கெட், தொழில் நிறுவனங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள் என பல உள்ளன. இதனால், அப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, விளையாட்டு மைதானத்திற்கு தினசரி ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் பயிற்சி செய்ய வருகின்றனர். இந்நிலையில், வீரப்பத்திர வீதியில் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மேன் ஹோல் வாயிலாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. மஞ்சள் நிறத்தில் வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி, வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்