மாநகராட்சியில் தெருவிளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்குகள் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
ஈரோடு மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மின் கோபுர விளக்குகள், சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள், சாலையோர தெரு விளக்கு கம்பங்கள் என பல்வேறு வகையான தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, ஈரோடு மாநகராட்சியில் 23 ஆயிரத்து 721 தெரு விளக்குகள் உள்ள நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், ரூ.15.89 கோடி மதிப்பில், கூடுதலாக 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மாநகராட்சியில் நீண்ட காலத்திற்கு முன்பு பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் மற்றும் பழுதான விளக்குகளுக்கு பதிலாக, புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு வரப்படுகிறது. மேலும், வெளிச்சம் குறைவாக எரியும் மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு வரப்படுகிறது. மின் சாதனப் பெட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கப்பட்டு வரப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது ஈரோடு மாநகராட்சி சார்பில், இனி வரும் காலங்களில், 3 மாதங்களுக்கு ஒரு முறை தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறும். பராமரிப்புப் பணியாளர்களும், அதற்குண்டான வாகனங்களும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஏதாவது ஒரு பகுதியில் தெருவிளக்குகளில் பழுது ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.