மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்;
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் மறுசீரமைப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், குடிநீர் திட்டப்பணிகள், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் மேலும் நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் மற்றும் முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி, கண்ணுடையாம்பாளையம் 2வது வீதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் மற்றும் அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் சிவசங்கர், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுகரசு, சண்முபிரியா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.