குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள பிரதான தண்ணீர் தொட்டியில் 2 மின் மோட்டார்கள் பழுதானதால் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.;
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வினியோகிக்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலமாக சூரியம்பாளையத்தில் கட்டப்பட்டு உள்ள 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்கும், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கட்டப்பட்டு உள்ள 1 கோடியே 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட குடிநீர் தொட்டிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் வ.உ.சி. பூங்காவில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு 25-க்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பிரதான தண்ணீர் தொட்டியில் நீரேற்றம் செய்வதற்காக 3 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மின்மோட்டார் பழுதுகடந்த சில நாட்களுக்கு முன்பு வ.உ.சி. பூங்காவில் உள்ள பிரதான தண்ணீர் தொட்டியில் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் மற்ற 2 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி மற்றொரு மின் மோட்டாரும் பழுதானது. இதனால் ஒரே ஒரு மின்மோட்டார் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. எனவே குடிநீர் சீராக வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக சம்பத்நகர், குமலன் குட்டை, ஈ.பி.பி.நகர், மாணிக்கம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியாவது:-வ.உ.சி. பூங்காவில் உள்ள பிரதான தண்ணீர் தொட்டியில் ஏற்கனவே மின் மோட்டார் பழுது ஏற்பட்டது. 20 குதிரை திறன் (எச்.பி.) திறன் உடைய மின் மோட்டார் என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே பழுதை சரிசெய்ய முடியும். இதனால் மின் மோட்டாரை கழற்றி கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மோட்டார் சரி செய்து திரும்ப கொண்டு வருவதற்குள், மற்றொரு மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டு உள்ளது. எனவே ஏற்கனவே சரிசெய்த மின் மோட்டாரை பொருத்திய பிறகு ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் சீராகும்.பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்