வேம்படி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே உள்ள பொன்செய் கிராமத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வேம்படி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் மற்றும் கூண்டு காவடி, அலகு காவடி எடுத்த பக்தர்களும் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.;
மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டான் ஊராட்சி பொன்செய் கிராமத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வேம்படி மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. புஞ்சை காவிரி ஆற்றங்கரையில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்திய காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் கூண்டு காவடி, அலகு காவடி எடுத்த பக்தர்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.