கல்வி ஒன்றே நம்மை இந்த சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும்

பெரம்பலூர் மாவட்டத்தில் 429 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 53,877 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், புதிய பாட நூல்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட உள்ளது.;

Update: 2025-06-02 15:18 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் 429 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 53,877 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், புதிய பாட நூல்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட உள்ளது - குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (02.06.2025) சென்னை திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025- 26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், பாடநூல்கள் மற்றும் புத்தகப் பையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (02.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார். இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடப்பு கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடநூல்கள், இரண்டு எண்ணிக்கையிலான பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 429 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 53,877 விலையில்லா பாடப்புத்தகங்களும், 418 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 52,071 விலையில்லா நோட்டுப்புத்தகங்களும், 418 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 31,903 விலையில்லா சீருடைகள் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்வி ஒன்றே நம்மை இந்த சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் என்பதை உணர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளாகிய நீங்கள் அரசின் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து, வாழ்வில் உயர உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்தார். இதேபோல பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள், பள்ளி சீருடைகள் மற்றும் புத்தக பையினை வழங்கினார். இந்நிகழ்வுகளில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.தேவநாதன், முதன்மை கல்வி அலுவலர் (பொ) ம.செல்வகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் க.ஜெய்சங்கர் குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News