நாமக்கல் அருகே மிக பிரம்மாண்டமாக அமைய உள்ள ஐயப்பன் திருக்கோவில் திருப்பணி துவக்க விழா! அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கே.ஆர்.என்‌.இராஜேஸ்குமார் எம்பி பங்கேற்பு!

இரண்டு ஆண்டுகளுக்குள் கோவில் திருப்பணிகள் நிறைவடையும்.கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் சுவாமி திருக்கோவில் போலவே இங்கு கோவில் அமைக்கப்பட உள்ளது சிறப்பம்சமாகும்.;

Update: 2025-06-04 15:12 GMT
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைச் சாரல், வரகூர் பகுதியில் அமைய உள்ள, ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கான திருப்பணிகளை, மாநில நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல், கரூர், திருச்சி,மதுரை மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொல்லிமலையின் சாரல் பகுதியில் வரகூர் என்ற இடத்தில் ஓம் குருவனம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே உயரமான குரு தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில்
புதியதாக ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் திருக்கோவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கோவில் அமைய உள்ள மாதிரிகள் மற்றும் மாதிரி படங்களை அவர்கள் திறந்து வைத்தனர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நேரு, இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு பிடித்த ஆன்மிக வழியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கேரளாவில் உள்ளது போல ஐயப்பன் சுவாமி திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது, இப்பகுதியில் உள்ள பக்த பெருமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். எங்களால் உரிய ஒத்துழைப்புகளை இந்த ஆலயத்திற்கு வழங்குவோம் என்று பேசினார்.தொடர்ந்து பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி இந்த ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவோம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பக்தர்களின் கும்மியாட்டம், கோலாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ பிரம்ம வித்யா ஜோஷி மடம் தர்ம குரு கருடானந்த சரஸ்வதி மஹராஜ், முன்னாள் காவல்துறை தலைவர் அ.பாரி, கேரளாவின் சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா ராஜ பரம்பரை பந்தள மகாராஜா புதுக்கோட்டை ராஜராஜ வர்ம தம்புரான், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகம், பின்னணி பாடகர் ஸ்ரீ வீரமணிதாசன், ஓம் குருவனம் ஜீவகாருண்ய விஸ்வ கேந்திரா தலைவர் தவத்திரு காந்திஜி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கலா சேதுபதி, நாமக்கல் ஐயப்பன் திருக்கோவில் அறக்கட்டளை செயலாளர் பாண்டியன் குருசாமி, நாமக்கல்-கரூர்- திருச்சி-மதுரை மாவட்ட பக்தர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆலயத்தில் ஆண்கள்-பெண்கள் விரதமிருந்து ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்யலாம். 2 ஆண்டுகளுக்குள் கோவில் திருப்பணிகள் நிறைவடையும்.கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் சுவாமி திருக்கோவில் போலவே இங்கு கோவில் அமைக்கப்பட உள்ளது சிறப்பம்சமாகும்.நிகழ்ச்சியை ஸ்ரீ பூதநாத பக்த சமாஜ் துணைச் செயலாளர் ஸ்காட் தங்கவேல் தொகுத்து வழங்கினார்.

Similar News