ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பால் பரபரப்பு
ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் தண்ணீர் வரியை கடுமையாக உயர்த்தும் திட்டத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு -வாக்குவாதம்;
ஈரோடு மாநகராட்சி கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.ஈரோடு மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசுகையில், தற்பொழுது வீடுகளுக்கு தண்ணீர் வரி ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் இப்போது வீடுகளின் சதுர அடி பரப்பளவின்படி வரி கடுமையாக உயர்த்தப்படும். இது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏற்கனவே குப்பை வரி அதிகமாக இருக்கிறது. நாங்கள் மாநகராட்சியிடம் அதை ரத்து செய்ய கோரினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றனர். ஈரோடு 1-மண்டலம் தலைவர் குறிஞ்சி தண்டபாணி பாதாளசாக்கடை அமைப்பில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குறைபாடுகளை எடுத்துரைத்தார்.கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆயுர்வேத மையத்தை மீண்டும் திறக்காமல் தாமதப்படுத்துவது குறித்துகாங்கிரஸ் கவுன்சிலர் சபுராம கேள்வி எழுப்பினார்.திமுக உறுப்பினர் கோகிலவாணி மணிராசு தனது வார்டில் பல பணிகள் தனக்கு தெரியாமல் நடப்பதாகவும் ரேஷன் கடை திறப்பு விழாவில் எம்.பி கலந்து கொண்டார். அதற்கு அழைப்பு இல்லை என்று புகார் கூறினார். இதுசம்பந்தமாக மேயர் மீது அவர் புகார் கூறினார்.இதற்கு மேயர் பதில் அளிக்கையில், உங்கள் வார்டு பற்றி மட்டும் பேசுங்கள். மற்றவர்கள் பற்றி பேசாதீர்கள். உங்கள் வார்டு நிகழ்ச்சிக்கு நான் வரவே இல்லை. எதுவாக இருந்தாலும் அதிகாரியிடம் விளக்கம் கேளுங்கள். மக்கள் கோரிக்கை வைக்கும் போது எந்த வார்டாக இருந்தாலும் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இதில் இந்த வார்டு அந்த வார்டு என்று நான் பார்ப்பதில்லை என்று பதில் அளித்தார். இதை அடுத்து அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர். கவுன்சிலர் மற்றும் மேயருக்கு இடையே நடந்த வாக்குவாதம் சபையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசும்போது,கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 458 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாதவை கண்டித்தும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறினார்.மேலும் பழுதான மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் காலதாமதம் செய்யக்கூடாது. 12.3.2025 மேயர் உள்பட அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இன்று வரை தமிழக அரசு மாநகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சொத்துவரி பிப்ரவரி குறைக்கப்படாததை கண்டித்து மேல் நடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் மாநகராட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் வெளியிடப்பு செய்தனர்.