சிறுமியை கடத்திய வாலிபர் கைது
ஆசை வார்த்தை கூறி கடத்தி வந்தார் பெருந்துறையில் மேற்கு வங்காளம் சிறுமி மீட்பு வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கு வருகின்றன. இங்கு பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பல்வேறு வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பெருந்துறை, பணிக்கம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராட் சர்தார் (23) என்பவர் பெருந்துறையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென சாம்ராட் சர்தார் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை திருமணம் செய்து கொண்டு பெருந்துறைக்கு அழைத்து வந்துள்ளார். பணிக்கம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் மகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து மேற்கு வங்காள போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் மேற்கு வங்காள போலீசார் விசாரணை நடத்திய போது சிறுமியை சாம்ராட் சர்தார் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பெருந்துறையில் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்காள போலீசார் பெருந்துறை வந்தனர். அங்கு பெருந்துறை போலீசார் உதவி உடன் பணிக்கம் பாளையத்தில் இருந்த சிறுமியை மீட்டனர். சிறுமியை கடத்தி வந்த சாம்ராஜ் சர்தாரையும் கைது செய்தனர்.