கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம் பொருத்த வேண்டும்
இணை இயக்குனர் தகவல்;
சேலம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இணை இயக்குனர் சுமதி தலைமை தாங்கி பேசியதாவது:- சேலம் மண்டலத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து கனிமங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு இ-பெர்மிட் மற்றும் இ-டிரான்சிட் பாஸ் வழங்கப்படாது. மேலும் சேலம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடை மேடை நிறுவ வேண்டும். புதிதாக குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விதிகளுக்கு முரணாக குவாரி பணிகளை செய்தால் அந்த குவாரியின் மீது அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரிய அரசு அனுமதி சீட்டு இல்லாமல் கனிமங்களை வெட்டி எடுத்துச்செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குத்தகை உரிமம் வழங்கப்பட்ட குவாரி எல்லைகளை டி.ஜி.பி.எஸ். சர்வே மூலம் வரையறை செய்து எல்லை தூண்கள் அமைத்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.