சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட குகை கறி மார்க்கெட் பகுதியில் உள்ள நவீன இறைச்சி கூடத்தை ஆணையாளர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், நவீன இறைச்சி கூடத்தில் உள்ள வளாகத்தின் சுற்றுப்புற சுவர்கள், மேற்கூரை ஆகியவற்றை வெள்ளை அடிக்கவும், வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றவும், வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் அவர் அருகில் உள்ள சுகாதார வளாகத்தை பார்வையிட்டு சாய்தளம் உடைந்துள்ளதை புதுப்பிக்கவும், தண்ணீர் வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது உதவி ஆணையாளர் வேடியப்பன், மாநகர நல அலுவலர் முரளிசங்கர், செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.