மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் ஊராட்சி கீழப்பெரம்பூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சை காளியம்மன் ஆலயத்தின் சம்பத்திர அபிஷேக திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு (செவ்வாய்க்கிழமை) நேற்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வானவேடிக்கை, நாதஸ்வரம், மேள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா காட்சியும், பச்சை காளி, பவள காளி நடனங்களும் நடைபெற உள்ளது.