மஞ்சூர் கெத்தை சாலையை உரிமை கொண்டாடிய யானை கூட்டம்

அரசு பேருந்து மறிக்கப்பட்டதால் பரபரப்பு;

Update: 2025-08-12 16:30 GMT
மஞ்சூர் கெத்தை சாலையை உரிமை கொண்டாடிய யானை கூட்டம் – அரசு பேருந்து மறிக்கப்பட்டதால் பரபரப்பு நீலகிரி மாவட்டம், மஞ்சூர் – கெத்தை சாலை பகுதியில் இன்று மாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. வழக்கம்போல பஸ்கள் மற்றும் வாகனங்கள் பிஸியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், காட்டுப் பகுதியில் இருந்து திடீரென யானைக் கூட்டம் சாலையில் வந்தது. குட்டிகளுடன் சுமார் 6 யானைகள் கொண்ட கொட்டம், நீண்ட தூரம் சாலையிலேயே அணிவகுத்துச் சென்று, சாலையை ஒட்டிய பகுதிகளில் சிறிது நேரம் நின்று பசும்புல் மற்றும் மரக்கிளைகளை தின்னிக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பாதையில் அரசு பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. யானைகள் பேருந்தின் முன்பாகவே நின்று, வழியை மறித்தபடி நீண்ட தூரம் சாலையிலேயே நடந்து சென்றன சில நிமிடங்கள் பேருந்து சாலையில் நின்றுவிட்டதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யானைகளை அருகில் காண, பரபரப்புடன் கைத்தொலைபேசிகளில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர். பின்னர், யானைக் கூட்டம் சாலையில் சில நூறு மீட்டர் தூரம் அணிவகுத்து நடந்துவந்து, அமைதியாக அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம் ஏற்பட்ட போக்குவரத்து மீண்டும் சீரானது. குறிப்பாக, மஞ்சூர் – கெத்தை சாலை பகுதியில் இத்தகைய சம்பவங்கள் தினமும் நடைபெறுவதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் பரவசத்துடன் காண்கிறார்கள். இன்று கண்ட காட்சியில், “இது எங்கள் பகுதியே!” என உரிமை கொண்டாடும் விதமாக கூட்டமாகச் சென்ற யானைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. சுற்றுலா பயணிகள், இது ஒரு மறக்க முடியாத இயற்கை தருணம் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “மஞ்சூர் கெத்தை சாலைபகுதிகள் யானைகள் இயங்கும் முக்கிய பாதைகள். குறிப்பாக மழைக்காலத்தில் பசும்புல் மற்றும் தண்ணீரைத் தேடி சாலையை கடப்பது அல்லது சாலையிலேயே நடந்து செல்வது அதிகரிக்கும். வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன், குறைந்த வேகத்தில் பயணிக்க வேண்டும்” என்று எச்சரித்தனர். இந்த சம்பவம், மனிதர் – வனவிலங்கு இணை வாழ்வின் அருமையை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.

Similar News