அடிப்படை வசதிகளுக்கே காத்திருக்கும் குன்னூர் காந்திநகர் மக்கள்
உடனடி நடவடிக்கை கோரிக்கை;
அடிப்படை வசதிகளுக்கே காத்திருக்கும் குன்னூர் காந்திநகர் மக்கள் உடைந்து போன நடைபாதைகள் – துரும்பு பிடித்து ஒழுகும் குடிநீர் குழாய்கள் – விரக்தியின் உச்சத்தில் பொதுமக்கள் குன்னூர், ஆக. 19: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள 29வது வார்டு காந்திநகர் பகுதி பொதுமக்கள், அடிப்படை தேவைகளே பூர்த்தியாகாத நிலையில் அவதி அடைந்து வருகின்றனர். சீரமைக்கப்படாத சாலைகள், உடைந்த நடைபாதைகள், பழுதடைந்த குடிநீர் குழாய்கள் ஆகியவை மக்களின் அடிபடை வாழ்வையே சிரமமாக்கியுள்ளன. நடப்பதே ஆபத்து அப்பகுதியில் உள்ள நடைபாதைகள் பல இடங்களில் உடைந்து பள்ளங்களாக மாறியுள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், பெண்கள் அனைவரும் தினமும் ஆபத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. “நடப்பதே உயிர் அச்சமாக மாறியுள்ளது” என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீரும் வீணாகிறது காந்திநகர் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் பெரும்பாலானவை துரும்பு பிடித்த நிலையில் உள்ளன. சில இடங்களில் குழாய்கள் உடைந்து, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக ஒழுகி வருகிறது. இதனால் குடிநீர் விநியோகமே பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீர் பெற கூழாய் அடியில் பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வேதனை “சாலைகளும் நடைபாதைகளும் உடைந்து கிடக்கின்றன. குடிநீர் சரியாக வருவதில்லை. பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகளும் நகரமன்ற உறுப்பினரும் எங்கள் பிரச்சினையை புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் வந்தால்தான் வாக்கு கேட்கின்றனர்; பிறகு எங்களை யாரும் பார்க்கவில்லை” என மக்கள் விரக்தியுடன் தெரிவித்தனர். அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நகராட்சி அலட்சியம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “நகரத்தின் மத்தியில் இருக்கும் காந்திநகர் கூட இவ்வளவு புறக்கணிக்கப்படுகிறதானால், தொலைவிலிருக்கும் கிராமங்களின் நிலை என்னவாக இருக்கும்?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடி நடவடிக்கை கோரிக்கை அப்பகுதி பொதுமக்கள், உடைந்த நடைபாதைகளை சீரமைத்து, புதிய குடிநீர் குழாய்களை அமைத்து, அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.