ஜெயங்கொண்டம் நகராட்சி நுண் உரமாக்கும் மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள் சுகாதாரம் காக்க பாஜகவினர் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி நுண் உரமாக்கும் மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள் சுகாதாரம் காக்க நகராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
அரியலூர், செப்.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் கலிச்சுகுழி என்ற இடத்தில் கிராவல் மண் வெட்டப்பட்ட பள்ளத்தில் மழைக்காலங்களில் நீர்த்தேங்கி ஏரியாக உள்ள நிலையில் அதனை அப்பகுதி கிராம மக்கள் நீண்ட காலமாக குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நுண் உரமாக்கும் மையம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டால் கிராமப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி அப்பகுதி கிராமமக்கள் அப்போதே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு அந்தத் திட்டம் அப்பகுதியில் தொடங்கப்பட்டு தற்போது தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தேவையற்ற கழிவுகளை ஓரிடத்தில் சேகரித்து உரம் தயாரித்தும், நகரப் பகுதிகளில் செப்டிக் டேங்கில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீரும் அங்கு சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் நுண் உரமாக்கல் மையத்தால் (குப்பை கிடங்கு) புதுக்குடி கிராம மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயத்தாலும், துர்நாற்றம் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கசிவு ஏற்பட்டு குளிக்க பயன்படுத்தும் ஏரியில் கலப்பதாகவும் தினம் தினம் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழல் உள்ளதாகவும் கூறி ஜெயங்கொண்டம் நகராட்சி மூலம் நுன் உரமாக்கும் மையத்தை அப்புறப்படுத்த வேண்டும், இல்லையேல் குப்பை கிடங்கை சுற்றிலும் சுற்று சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையிலான பாஜகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் புதுக்குடி கிராமம் செங்குந்தபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து வந்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சக்கரவர்த்தி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் நகராட்சி ஆணையர் நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டுமென பாஜகவினர் ஆணையர் வருகைக்காக காத்திருந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அலுவலக பணியாளர்கள் நகராட்சி ஆணையர் அலுவலக பணி காரணமாக அரியலூர் சென்றிருப்பதாக தெரிவித்தும் வரும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என பிடிவாதமாக காத்திருப்பு போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். பின்னர் அலுவல் காரணமாக அரியலூர் சென்று திரும்பிய நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பாஜகவினர் பசுமை தீர்ப்பானையம் பரிந்துரைப்படி புதுக்குடியில் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி நுன் உரமாக்கும் மையத்தை (குப்பை கிடங்கு) செயல்படுத்த வேண்டும், மேலும் நுன் உரமாக்கும் மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து கழிவு நீர் உள்ளிட்ட கழிவுகள் கலிச்சுக்குழி ஏரியில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் நகராட்சி நுண் உரமாக்கும் மையத்தை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறும்போது :- சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு நடக்கவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் இது சம்பந்தமாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது அதன்படி சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிப்பதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் இளையராஜா, ஒன்றிய தலைவர் குவாகம் பரமசிவம், நகரத் தலைவர் வரதராஜன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஆனந்தகுமார், செந்தில்குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .