வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில்
மூதாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்தார்;
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணி திருவாசல்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி (68). இவருடைய கணவர் 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், ராசாத்தி தனக்கு சொந்தமான கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. திடீரென அருகில் இருந்த பெரிய மரம், மழை மற்றும் காற்றின் தாக்கத்தால் வேரோடு சாய்ந்து, ராசாத்தி வசித்த வீட்டின் மீது விழுந்தது. மேலும், வீட்டின் பக்கவாட்டு சுவரும் இடிந்து ராசாத்தி மீது விழுந்ததால், இடர்பாடுகளில் சிக்கிய அவர் கடுமையாக காயமடைந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்ட மகன் சக்திவேல் உடனே அங்கு சென்று பார்த்தபோது, தாய் ராசாத்தி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக மீட்டு பார்த்தபோது, ராசாத்தி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார், உடலை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கீழவெண்மணி மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.