பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டு சிறப்பு பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.;
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (PMFBY) நெல் மற்றும் சிறிய வெங்காயம் பயிர்களுக்கான காப்பீடு திட்டம் சிறப்பு பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் (AICIL) என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் நெல்- II மற்றும் சிறிய வெங்காயம்-II ஆகிய பயிர்கள் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு 16.12.2025 மற்றும் சிறிய வெங்காயம் பயிருக்கு 01.12.2025 தேதிகள் காப்பீடு செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமீயத் தொகை நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.567.61-ம், சிறிய வெங்காயத்திற்கு ரூ.2087.16-ஐ செலுத்தி காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே சிறப்பு பருவத்தில் நெல் மற்றும் சிறிய வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள 'விவசாயிகள் கார்னரில்” (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ-அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aathar card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். விவசாய பெருங்குடி மக்கள் நெல் மற்றும் சிறிய வெங்காயம் பயிர் காப்பீடு செய்வது குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆகியோரை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரித்துள்ளார்.