கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவள லாரிகள் அதிகபாரத்துடன் இரவு பகலாக செல்வதால் குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகள் சேதம் அடைவதும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் தொடர்கதையாக உள்ளது. இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரண்டு கனிம வள லாரிகள் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக யார் முந்தி செல்வது என்று போட்டி போட்டுக்கொண்டு முன்னும் பின்னுமாக சென்றன. காந்தி மைதானம் பகுதியில் பாலத்தின் மேற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மார்த்தாண்டம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு டாரஸ் லாரிகளும் ஒரே நேரத்தில் முன் சென்ற போது, அரசு பஸ்ஸிலும் பாலத்தின் பக்கவாட்டிலும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தை கண்டு அச்சமடைந்த பஸ் பயணிகள் இதில் பஸ்ஸிலிருந்து அலறினர். இதில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல முடியாதபடி பாலத்தில் ஒரே நேர்கோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று வாகனங்களும் மீட்கப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது. அரசு உடனடியாக கனிம வளலாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.