விளைச்சல் அதிகரித்ததால் விலை சரிவு பரமத்திவேலூரில் முருங்கைக்காய் ரூ.2க்கு விற்பனை.
விளைச்சல் அதிகரித்ததால் விலை சரிவு பரமத்திவேலூரில் முருங்கைக்காய் ரூ.2க்கு விற்பனை விவசாயிகள் கவலை.;
பரமத்தி வேலூர்,மார். 6: பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர், பாண்டமங்கலம், கோப்பணம்பாளையம், குச்சிபாளையம், வெங்கரை, சாணார் பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை,ஜேடர்பாளையம், நன்செய்இடையார், ஓலப்பாளையம், பாலப்பட்டி உள்பட பல கிராமங்களில் முருங்கை சாகுபடி செய் துள்ளனர். தை மாதத்திற்கு முன்பு உள்ளூரில் முருங்கைக்காய் வரத்து மிகவும் குறைந்ததால் பரமத்தி வேலூர் பகுதியில் விளைந்த முருங்கைக்காயை உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப் பட்டது. ஆனால் தற்போது பரமத்தி வேலூர் பகுதியில் பல இடங்களில் முருங்கைக்காய் அறு வடை மும்முரமாக இருப்பதால் உழவர் சந்தை, மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் அதிகரித்தது. ஒரு கிலோவில் சிறியது, பெரியது என 20 முதல் 30 வரை முருங்கைக்காய் இருக்கும் இதனால் முருங்கைக்காய் விலை குறைந்து ஒருகிலோ ரூ.70-க்கு விற்பனை யானது. மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.2-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.70 இதுகுறித்து முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில் கடந்த தை மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இன்னும் 3 மாதகாலத்தில் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் காலம் வரும். அப்போது எங்களுக்கு அறு வடை செய்யும் கூலிக்குகூட கட்டுபடி ஆகாது. எனவே அரசு முருங்கை விற்பனையை ஒரே சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விலை குறையும் போது அதிகளவு ஏற்றுமதிக்கு ஊக்குவித்து, ஏற்றுமதி வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.