இளம் பயிர்கள் தண்ணீரில் முழ்கியிருந்த 2 கி.மீ. வாய்க்காலை

சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்;

Update: 2025-09-23 04:16 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சியில், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, பண்டாரவாடை, குருவாடி, தென்பிடாகை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் முளைவிட்டிருந்த இளம் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது, இதனால் விவசாயிகள் விவசாயம் பொய்த்து விடுமோ என்ற கவலையில் வேதனை அடைந்தனர். இந்நிலையில், விவசாயிகள் கலந்து ஆலோசனை செய்தனர். முடிவில், ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய சொந்த செலவில், பண்டாரவாடை வடிகால் வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்காலை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரினர். இதனால் அதிக அளவில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டும் விவசாய நிலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்த போது விவசாயிகள் ஒன்று சேர்ந்து இதே வடிகால் வாய்க்காலை தூர்வாரினர் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வடிந்ததால் நடப்பாண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Similar News