ஜெயங்கொண்டம் அருகே மழையில் நனைந்து ஊறிய மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி. கூரையை பிரித்து அகற்றியபோது சம்பவம்
ஜெயங்கொண்டம் அருகே மழையில் நனைந்து உரிய மன்சுவர் இடிந்து விழுந்து இரண்டு பேர் பலியான சம்பவம் துளாரங்குறிச்சி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
அரியலூர், அக்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி என்பவரது மகன் அன்பழகன் (46) (விவசாயக் கூலி) இவர் தனது வீட்டின் கூரையை மாற்றி அமைக்க வேண்டி துளாரங்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன் (60) என்பவருடன் சேர்ந்து மழையில் நனைந்து ஊறிய நிலையில் இருந்த தனது வீட்டின் கூரையை பிரித்து அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மழையில் நனைந்து உரிய நிலையில் காணப்பட்ட மண்சுவரானது உள்பக்கமாக திடீரென எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் அன்பழகன், ராமச்சந்திரனும் மண் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் ஓடி வந்து மண் சுவற்றை அகற்றி அவர்கள் இருவரையும் மீட்டனர். இருப்பினும் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து அன்பழகனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போன ராமச்சந்திரனுக்கு 6 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர். அதேபோல் அன்பழகனுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.