சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
மயிலாடுதுறை அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:-;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, பெரம்பலூர் மாவட்டம் திட்டக்குடி பூதங்குடியை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் என்பவர் 2021-ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் விக்னேஷ் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ வழக்கு பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, இவ்வழக்கினை விசாரித்து விக்னேஷை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் விக்னேஷை (வயது 29) கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கினை சிறப்பாக நடத்திய மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமசேயோனை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பாராட்டினார்